திருவாரூர்: தமிழ்நாட்டின் மாநில மரமாக விளங்கி வரும் பனைமரத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு, சமீபத்தில் வேளாண்பட்ஜெட்டில் பனைமரம் குறித்துப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
இதில் பனை மரத்தை வெட்டக்கூடாது என்றும்; பனை மரத்தை வெட்டினால் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்பேரில் தான் வெட்ட வேண்டும் என்றும்; மீறி வெட்டினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
மேலும் ரேஷன் கடைகள் மூலம் பனைவெல்லம் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைக்கச் செய்தது. இருப்பினும், தற்போது பல்வேறு காரணங்களுக்காகப் பனை மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் வேதனைத்தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பனைமரங்கள் அழிக்கப்படும் அவலம்
இதுகுறித்துப் பேசிய சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும், 'தமிழ்நாடு பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்டக்கூடாது என்றும்; ரேஷன் கடைகள் மூலம் பனைவெல்லம் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிப்பை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதேபோல், தற்போது தமிழ்நாட்டில் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. கஜா புயலின்போது, லட்சக்கணக்கான பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும்; சமூக ஆர்வலர்களும் பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கிராமப்பகுதிகளில் செங்கல் சூளை மற்றும் வீட்டு உபயோகத்திற்காகப் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணியினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு லட்சம் பனை விதைகள் - வேளாண் துறைக்கு அனுப்பி வைத்த சபாநாயகர்