திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் தனது காதலியை ஏற்றிக் கொண்டு, திருவள்ளுவர் நகர் அருகே உள்ள முள்ளுகுட்டி ஏரிக்கரைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்கள், இவர்களை வழிமறித்து தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர். அப்போது கார்த்தி 'தங்களை விட்டுவிடுங்கள். தாங்கள் இங்கிருந்து சென்றுவிடுகிறோம்' எனக் கேட்டுள்ளார்.
ஆனால், மது போதையிலிருந்த கும்பல் கார்த்தியை கீழே தள்ளிவிட்டு அவரது காதலியிடம் தகாத செயலில் ஈடுபட முயற்சித்துள்ளனர். இதனைக் கண்ட கார்த்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.
பின்னர், காதலியை அங்கிருந்து தப்பிக்க வைத்தார். இதனையடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியின் கை, கழுத்து, முதுகுப் பகுதியில் வெட்டியுள்ளனர். அதில், கார்த்தி கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்துள்ளார்.
இச்சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்துவிட்டதால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பலத்த காயமடைந்த கார்த்திக்கின் சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்கள் ஏதேனும் சிக்குகின்றதா என சோதனை செய்தனர். இதையடுத்து, இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை - குமரியில் பரபரப்பு..!