திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (53) என்பவர் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தக் கூட்டுறவு வங்கியில் சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் ரூ. 50 ஆயிரம் பயிர்க்கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து, கடந்த வாரம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் , ஸ்ரீதேவி கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கடனும் தள்ளுபடி ஆனதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான சான்றிதழ் வழங்க, கூட்டுறவு வங்கி செயலாளர் அண்ணாதுரை, ஸ்ரீதேவியிடம் ரூ. ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீதேவி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் அளித்த வழிகாட்டுதல்படி ஸ்ரீதேவி நேற்று (பிப். 20) மாலை 5 மணியளவில், கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரையிடம் வழங்குவதற்காக ரூ. ஐந்தாயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அண்ணாதுரை அந்த பெண்ணிடமிருந்து பணத்தை நேரடியாக வாங்காமல், அருகே உள்ள மேஜை மீது வைக்கும்படி கூறியுள்ளார். அண்ணாதுரை பணத்தை நேரடியாகக் கையில் வாங்காததால், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பினார். இருப்பினும் காவல்துறையினர் இன்று (பிப். 21) அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தினர்.
அதில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது, வழங்குவது போன்ற பல்வேறு வகையில் ரூ. 25 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர் . மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.