கரோனா வைரஸ் நோய் தாக்கத்தையடுத்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் ஆகியவை நகராட்சி பணியாளர்களைக் கொண்டு, தெருத்தெருவாக வீடுகள்தோறும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பெய்த திடீர் மழையால் நகரப் பகுதியில் இருந்து, கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட அனைத்தையும் மழை வெள்ளம் அடித்துக்கொண்டு ஏரியில் கொண்டு வந்து சேர்த்தது. பொதுவாக திருவண்ணாமலை நகரத்தில் மழை பெய்தால், அந்த மழை நீரானது நொச்சி மலை ஏரிக்குத் தான் சென்று சேரும்.
அவ்வாறு கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர், சோப் ஆயில் கலந்து வந்த மழை வெள்ளம், நொச்சி மலை ஏரியிலிருந்த மீன்களை பாதித்ததன் காரணத்தால், மீன்கள் அனைத்தும் துள்ளித்துள்ளி, துடிதுடித்து உயிரிழந்து வருகின்றன. அவ்வாறு 10 டன் எடைக்கும் மேற்பட்ட மீன்கள் இறந்து, கரை ஓரம் ஒதுங்கி உள்ளன. இவ்வாறு இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் மீன்களால், அப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி துர்நாற்றம் ஏற்படாமல், இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா: குளத்தில் மருந்து தெளித்ததால் செத்து மிதந்த மீன்கள்