திருவண்ணாமலை: நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 10) இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்துள்ளார். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள குனிகாந்தூர் பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மலைவாழ்மக்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது பேசிய அவர், “ஜவ்வாதுமலையில் காந்திய சிந்தனை கொண்டு பழங்குடியின மாணவர்களுக்கு சிறந்த கல்வியுடன், கலையாற்றல்களுடன், ஒழுக்கத்தையும் கற்பித்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவர்கள் வளர்ந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும். இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளதால், இந்தியாவை உலக நாடுகள் உற்றுப் பார்க்கின்றன.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றிக் கொண்டாட வேண்டும்” என கேட்டுக் கொண்டார். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசியக்கொடி மற்றும் பிரதமர் எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உண்டுஉறைவிடப்பள்ளி தலைவர் அர்சுணன், பள்ளித் தலைமை ஆசிரியை சிலம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இதனையடுத்து, நேற்று (ஆகஸ்ட் 11) காலையில் அளுநர் ரவி தனது குடும்பத்தாருடன் புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மேலும், மாவட்டதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது திருவண்ணாமலை ஒரு ஆகச் சிறந்த இடம் என்று கூறிய அவர், கிரிவலப் பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், திருவண்ணாமலையின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
மேலும் அவர், திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமியாகவும், முக்தி தரும் பூமியாகவும் விளங்குகிறது என்றும், உலகில் ஆன்மீக பூமி பல உள்ள நிலையில், பக்தர்கள் ஆசைப்பட்டு வரும் ஆன்மீக பூமியில் ஒன்றாக திருவண்ணாமலை விளங்குவதாகவும், இதுவே திருவண்ணாமலைக்கு தனது முதல் பயணம் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் சிறப்பை பற்றி கூறிய அவர், மற்ற நாடுகளைப்போல் இந்தியா இல்லை என்றும், மற்ற நாடுகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால், இந்தியா ஆன்மீக சக்தியால் உருவாக்கப்பட்டது. சாதுக்களாலும், ரிஷிகளாலும் ஆன்மீகத்தால் உருவாக்கப்பட்ட நாடுதான் நமது பாரத நாடு என கூறினார்.
இந்தியா என்னும் கட்டமைப்பு சிவனால் உருவாக்கப்பட்டது என்றும், நமது நாடு பாரம்பரிய இலக்கியத்துடன் தொடர்புடைய நாடு. இந்தியா என்பது ஒரு சனாதன மையம். சனாதன தர்மம் தனி ஒருவருக்கு மட்டுமானது அல்ல. அனைவரும் வாழ வேண்டும் என்பதே சனாதன தர்மத்தின் சாராம்சம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பட்டுப்புழுவால் பணக்காரராக மாறிய கிராமம் விவசாயத்தை கைவிடும் அவலம்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?