கைத்தறி நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்தவும், வருவாயை உயர்த்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்தாவது தேசிய கைத்தறி தினவிழாவான நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நெசவாளர்ககுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்படி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார். மேலும் இந்த விழாவில் இரண்டு நெசவாளர்களுக்கு தார் சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டன. இது தவிர ஐந்து பெண் நெசவாளர்கள், மூன்று மூத்த குடி நெசவாளர்கள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளி நெசவாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காகவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடன் உதவிகள், மானியத்துடன் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் முதன்மைத் தொழிலாக காணப்படுகிறது. உலக அளவில் ஆரணி பட்டு ரகங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் நல்ல விலைக்கு விற்கப்பட்டு வருகிறது என்றார்.