திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 10 நாட்கள் மகா ஜோதியானது பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 11வது நாள் மலையில் இருந்து தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி முடிந்து, நேற்று காலை முதல் அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது.
அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களின் காணிக்கைகளும் எண்ணும் பணி நடைபெற்றது.
கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் ரூ.3 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரத்து 802 ரூபாய், தங்கம் 340 கிராம் மற்றும் வெள்ளி 1 கிலோ 895 கிராம் என உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலுக்கு மினி பேருந்தைத் தானம் செய்த பக்தர்..!