திருவண்ணாமலை மாவட்டத்தின் தமிழ்ச் சங்கத் தலைவரும், ஓய்வுபெற்ற தமிழாசிரியருமான அருள்வேந்தனிடம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுள்ளனர். கடந்தாண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளச் சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் பிறகு திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 2) காலை உயிரிழந்தார். அருள்வேந்தனின் உடல் திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகேயுள்ள கிறிஸ்தவ கல்லறையில் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
உறவினர்களே கரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுக்கு வர அச்சப்படும்போது, மனிதநேயத்தின் அடிப்படையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துவருகின்றனர்.
அந்தக் குழுவினர்தான் அருள்வேந்தனின் உடலையும் அடக்கம் செய்தனர். முன்னதாக, அவ்விடத்தில் கிறிஸ்தவ பாதிரியாரைக் கொண்டு ஜெபம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு மதவாத சக்திகள் மக்களிடையே வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டாலும், மக்கள் மதம் கடந்து மனிதத்துடன் இருக்கின்றனர் என்பதற்கு இந்நிகழ்வே சான்று.
இதையும் படிங்க: வெளிநாட்டில் இறந்த இந்துவின் உடலை மீட்டுக் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்