பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் உலக பிரசித்திப்பெற்றது.
இங்கு சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு திருமுழுக்கு, மலர் அலங்காரம் செய்து, தீப வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அருணாசலேசுவரர் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 27ஆம் தேதி தொடங்கியது.
இதில் சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் திருமுழுக்கு தீப வழிபாடு நடைபெற்றுவந்த நிலையில், இன்று ஆறாம் நாளில் சுவாமிக்கு பல்வேறு மூலிகைகள் கொண்டு திருமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க தீப வழிபாடு நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழாவைக் காண உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் கோயிலுக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினந்தோறும் கோயிலுக்குள் சிவாச்சாரியர்கள் மட்டுமே சென்று சுவாமிக்கு திருமுழுக்கு தீப வழிபாடு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:'இல்லாதவங்களுக்கு உதவுங்க சாமி...!' - குடிசைகளின் குரல்களுக்கு செவிசாய்க்குமா அரசு?