வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் அடுத்துள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(35), ஒடுக்கத்தூர் பெண்ணாதுரை கிராமத்தைச் சேர்ந்த சாந்திபிரியாவை ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் சீனிவாசனுக்கு ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் இணைந்து செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சீனிவாசன் பூங்குளம் கிராமத்திலிருந்து மரம் வெட்டுவதற்கு அசோகனுடன் கூலி ஆட்களை அனுப்புவது வழக்கம். அதுபோல், கடந்த சில தினங்களுக்குமுன் பூங்குளம் பகுதியிலிருந்து சீனிவாசன் அனுப்பிய கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா, சென்றாயன், சஞ்சய், பழனி, வெங்கடேசன் ஆகிய ஏழு பேர் அசோகனுடன் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர்.
அங்கு மரங்கள் வெட்டிமுடித்த பின்பு, வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழ்நாட்டிற்கு கடத்திக்கொண்டு வந்து அவற்றை விற்பனை செய்து பின்னர் கூலி வழங்குவதாகக்கூறி அசோகன் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பத்து நாட்களாகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டிய அந்த ஏழு பேரும், அசோகனிடமிருந்து கூலி வாங்கித்தருமாறு சீனிவாசனிடம் வற்புறுத்தியுள்ளனர்.
சீனிவாசன் பணம் பெற்றுத்தர தாமதப்படுத்தியதால் நேற்று இரவு அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சீனிவாசன் மனைவி சாந்திப்பிரியா மற்றும் அவரின் தாய், தந்தை ஆகியோர் அதை தடுக்க முயன்றபோது அந்தக்கும்பல் தள்ளி விட்டதில் சாந்திப்பிரியா கீழே விழுந்து மயக்கமடைந்தார். பின்னர் அந்தகும்பல் சீனிவாசனை காரில் கடத்திச் சென்று விட்டனர்.
மயக்கமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சீனிவாசனின் தந்தை மற்றும் மாமனார் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் !