திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருள் பாலிக்கும் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் ஆண்டு தோறும் தை மாதம் ஐந்தாம் நாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம், அதையொட்டி திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் அண்ணாமலையாருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு மண்டகப்படி செய்து வழிபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கரோனோ கட்டுப்பாடு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் இன்று நடைபெற இருந்த தீர்த்தவாரி விழாவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். இதனால் திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆறு தீர்த்தவாரிக்கு அண்ணாமலையார் புறப்பாடு இன்று நடைபெறவில்லை.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதைத் தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகே பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு அண்ணாமலையார் ரூபத்தில் உள்ள சூலத்திற்கு தீர்த்தவாரி நடந்தது.
இதையும் படிங்க:தென்பெண்ணை ஆற்றில் நாளை நடக்கவிருந்த அண்ணாமலையார் தீர்த்தவாரி ரத்து