திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடர்ந்து 10 நாள்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
திருவிழாவிற்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு பக்தர்களின்றி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில், இந்தாண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்று விழா வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி காலை திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்புறம் உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
பந்தக்கால் முகூர்த்தம் விழா
மேலும், நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் கருவறையில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்புறமுள்ள 2ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்தத் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாள்களும் காலை, இரவு என இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவைவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் தீட்டுதல், தேர்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்காக நேற்று (செப்.16) காலை திருக்கோயிலிலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
பின்னர், ஆலயத்தில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது.
இதையும் படிங்க: சபரிமலை நடை திறப்பு