திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு உண்டியலை உடைத்து 25 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வந்தவாசி, மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்தக் கோயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து, கோயில் நிர்வாகிகள் மாணிக்கவேல், வரதன், தயாளன் ஆகியோர் வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், வந்தவாசி நகரில் உள்ள மற்றுமொரு கோயிலான ஸ்ரீ இருசியம்மன் கோயில், உண்டியலை உடைத்து 6000 ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வந்தவாசி பெரிய காலனி பகுதியில் உள்ள இந்த இருசியம்மன் ஆலயத்தில், கோயில் பூசாரி நேற்று மாலை வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு கோயிலை பூட்டிச் சென்றுள்ளார். காலையில், கோயில் பூட்டுக்கள் மூடப்பட்டு அப்படியே இருந்த நிலையில், உண்டியல் மட்டும் பக்கவாட்டில் உடைக்கப்பட்டு 6000 ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து உடனடியாக வந்தவாசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான காவல் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்தத் திருட்டு சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வந்தவாசி பகுதியைச் சுற்றி அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இந்தத் திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மலைப்பாதையில் கவிழ்ந்த மாங்காய் ஏற்றி வந்த லாரி!