சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நீண்ட நாள்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. கரோனா பாதிப்பு குறைந்ததால் முதல்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இருப்பினும் பல மாவட்டங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிகள் திறந்தவுடன்தான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால்தான் தற்போது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.
ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் முறையாகக் கண்காணித்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளைக் கண்காணித்து அறிக்கை அளிக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பூஸ்டர் டோஸ் அனுமதி கிடைத்ததும் செயல்படுத்துவோம்- அமைச்சர் உறுதி