திருவண்ணாமலை: சமத்துவ இறைப் பணிக்காக தமிழ்நாட்டில் உள்ள அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மறுமலர்ச்சி பெறுவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி என்று தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வா. ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வா. ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்
'கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது முதன்முதலில் அமைக்கப்பட்ட ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 207 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அதன்பின் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு அதிமுக அரசால் கைவிடப்பட்டன.
இறைப் பணிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டன. தற்போதைய திமுக அரசு மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கு புத்துயிர் ஊட்டி சமத்துவ இறைப் பணிக்கு மாணவர்களைச் சேர ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் ஆகிய ஆறு திருக்கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற உணவு, தங்குமிடம், மாதம் ரூ.3000 உதவித் தொகையுடன் ஓராண்டு இலவசப் பயிற்சி, முடித்தவுடன் வேலை என இறைப் பணிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்களில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளும், பழனி தண்டாயுதபணி சுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில்களில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டா ஆறுமுகசுவாமி திருக்கோயிலில் திவ்ய பிரபந்தப் பாடசாலையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அர்ச்சகர்களுக்குப் பணி நியமனம்
அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இயற்றிய ஆணையை 2006-2011 அவரது ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தினார். உச்ச நீதிமன்றத்தடை மூலமாக அம்முயற்சி முடக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திருக்கோயில்களில் பணியமர்த்தப்படாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
அனைத்து பயிற்சிப் பள்ளிகளும் முடக்கப்பட்டன. புதிதாக ஆட்சி அமைத்த திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ், திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட 22 அர்ச்சகர்களுக்கு 14.08.2021 அன்று பணி நியமனம் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், 4 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், ஒரு திவ்ய பிரபந்தப் பாடசாலை என ஆக மொத்தம் 16 பயிற்சிப் பள்ளிகளுக்கு புத்துயிர் ஊட்டப்பட்டு சமத்துவ இறைப் பணிக்காக உதவித் தொகையுடன் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சமத்துவ இறைப்பணி

தமிழ்நாடு அரசின் இந்த சீரிய முயற்சியால், வருங்காலங்களில் இறைப்பணி வளர்ந்து தழைப்பதுடன், திருக்கோயில்களில் சமத்துவ அடிப்படையிலான ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பும் வாழ்வாதாரமும் தமிழ் இளைஞர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சாதியும் சமத்துவ இறைப் பணி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மறுமலர்ச்சிப் பணியால் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் போன்ற இறைப்பணியினர் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எங்கள் அர்ச்சகர் சங்கம் மற்றும் ஆன்மிகவாதிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு - தமிழ்நாட்டில் 7 இடங்களில் நம்ம ஊரு திருவிழா