திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக சிறப்பு யோக பயிற்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, வருவாய்த்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை, மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு யோகா பயிற்சியில் அக்கு பிரஷர் பாயிண்ட்ஸ் பயிற்சி, சூட்சும வியாயாமம் பயிற்சி கொடுக்கப்பட்டது.