திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அனைத்து தரப்பு வாக்காளர்களிடமும் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று (மார்ச்3) திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு காட்டப்பட்டன.
இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இ.வி.எம்), வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (விவிபிஏடி) ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்போம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் சார்பில் நடத்தப்பட்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் வணிகர்கள்: விக்கிரமராஜா