திருவண்ணாமலை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 21 ஆண்டுகளாக சாலைப்பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள ஈசான மைதானத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளார்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, விருதுநகர், நாமக்கல், அரியலூர், கோவை, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலைப்பணியாளர்கள் கோரிக்கைகள்: சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை பராமரிப்புக்கான காலி பணி இடங்களை கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்கிட வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலை துறையிலேயே கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளர் பணிக்கு மட்டுமே தகுதி பெற்ற 200க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் குடும்பத்தினருக்கு கோட்ட பொறியாளர்கள் மறைமுக தடைகளை நீக்கி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்துபடி, நிரந்தர பயணப்படி, சீருடை மற்றும் சலவைப்படி வழங்க வேண்டும். சமூகநீதி, இடஒதுக்கீடு கோட்பாட்டிற்கு எதிராக வெளியிட்டுள்ள முதுநிலை பட்டியலை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. திக்குமுக்காடிய தாம்பரம்.. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்!