திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் செல்லும் வழியிலேயே நாற்காலியில் அமர்ந்தவாறு சாமி தரிசனம் செய்து வந்தநிலையில், அங்கு பிற பக்தர்களைப் போல அவர்களுக்கும் சிறப்பு தரிசனம் செய்வதனைப் போல மாற்று வழி ஏற்படுத்தவேண்டும் என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் கடந்த 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற நிலையில் அன்று முதல் தற்போது வரை தமிழ்நாடு உட்பட ஆந்திரா, கர்நாடகா போன்றப் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆன்மிகப் பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
தற்போது அரையாண்டுத்தேர்வு முடிந்து பள்ளிகள் விடுமுறை நாட்கள் என்பதால் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்தவாறே உள்ளது. கோயிலில் பக்தர்கள் செல்ல தடுப்புகள் அமைத்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக, தனி வழியை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தவறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே இன்று (டிச.25) அண்ணாமலையார் கோயிலுக்கு நாற்காலியில் அமர்ந்தவாறு மாற்றுத்திறனாளி பெண் சென்றார். குறிப்பாக, அனைத்து பக்தர்களும் செல்லும் வழியிலேயே மாற்றுத்திறனாளி பெண்ணும் நாற்காலியில் அமர்ந்தவாறே சென்றார். அண்ணாமலையார் கோயிலுக்குள் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மாற்றுத்திறனாளிகளால் செல்ல இயலாது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனத்திற்காக வந்தபோது, சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்புவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வழியை ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகளும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடியோ: ஒரே இடத்தில் 1,220 பெண்கள் கும்மியாட்ட அரங்கேற்றம்