திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 73 அம்மா மினி கிளினிக் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மருத்துவாம்பாடி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.
இந்தக் கிராமத்திற்கு அம்மா மினி கிளினிக் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று (பிப். 12) திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதையொட்டி மினி கிளினிக் திறப்புக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக் திறக்க இருந்ததால் மருத்துவம்பாடி கிராம மக்கள் நேற்று காலை முதலே காத்திருந்தனர்.
ஆனால் பல மணி நேரம் கடந்தும் மினி கிளினிக் கட்டடத்தை திறக்கப்படாமல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அலுவலர்கள் புறக்கணித்தாகக் கூறப்படுகிறது.
இதனால் காலை முதல் மாலை வரை காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அம்மா மினி கிளினிக் முன்பாக சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை திறக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது