திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த, கொட்டகுளம் செய்யாற்றில் தொடர்ந்து பட்டப்பகலில் மணல் கொள்ளை நடக்கிறது. ஆற்று மணலை கடத்துவதற்கு ஏதுவான வகையில் மணலை சலித்து குவியல் குவியலாக வைத்து வாகனங்களில் மணல் கடத்துகின்றனர். இதனைக் கண்ட பொதுமக்கள், வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். எனினும், வருவாய்த்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள சூழலை பார்த்தாவது இனி இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும், நீராதாரத்தை பெருக்கும் வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். எனவே, மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வருவாய்த்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.