கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகிலுள்ள தெற்கு ஈஜிபுரா என்ற இடத்தில், கோதண்டராமர் கோவிலில் பீடத்துடன் 108 அடி உயரத்தில் கோதண்ட ராமர் சிலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் உள்ள கொரக்கோட்டை என்ற கிராமத்தில் உள்ள மலையில் இருந்து 380 டன் எடை கொண்ட ஒரே கல்பாறையில் இருந்து பிரம்மாண்டமான கோதண்ட ராமர் சிலை செதுக்கப்பட்டது.
தற்போது அந்த சிலை கிருஷ்ணகிரி அருகே உள்ள குருபரப்பள்ளி எனுமிடத்தில் உள்ள மார்கண்டேயன் ஆற்றுப்பாலத்தை கடக்க முடியாமல், அந்த வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றின் நடுவே தற்காலிக மண் பாதை அமைக்கப்பட்டது. அதிலும் பிடிப்பு இல்லாததால், வாகனம் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பிரம்மாண்டமான சிலை ஈஜிபுரா செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த சிலையை தமிழகம் வழியே எடுத்து செல்வதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் தராத கர்நாடகாவுக்கு கோதண்ட ராமர் சிலையை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோதண்ட ராமர் சிலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் கருத்து தெரிவித்த சூளகிரி பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், சத்தியமூர்த்தி, சந்தோஷ்குமார், பிரதீப்குமார், கோவிந்தராஜ், மகேந்திரன், கோவிந்தராஜ் ஆகிய 7 பேரை கிருஷ்ணகிரி போலீஸார் கைது செய்துள்ளனர்.