கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும்வகையில் மாநில அரசு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாம் கட்டமாக வழங்கப்படுகின்ற இலவச பொருள்களான அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது, டோக்கன் எண் அடிப்படையில் விலையில்லா பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, செட்டித் தெருவில் இயங்கிவரும் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் விலையில்லா நிவாரண பொருள்களை வாங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் முட்டிமோதி தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் குவிந்தனர்.
கரோனா வைரஸ் பரவல் குறித்த எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி, நியாய விலைக் கடையின் ஊழியரும், மக்களுக்கு பொருள்களை விநியோகித்தார்.
மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அறிவித்து செயல்படுத்தியிருந்தது. ஆனால், மக்களும், நியாய விலைக் கடையின் ஊழியரும் இதனைக் கடைபிடிக்கத் தவறியது அனைவரிடத்திலும் பேசு பொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: காற்றில் பறந்த தகுந்த இடைவெளி: குஷியாக மதுகடைக்கு சென்ற மது பிரியர்கள்!