திருவண்ணாமலை: தேவனந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது புனல்காடு. இந்த கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் சுமார் 6 ஏக்கர் நிலப் பரப்பளவில் உள்ள காடுகளை அழித்து அந்த இடத்தில் புதிதாக குப்பை கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள 39 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் புனல்காடு கிராமம் அருகே புதிதாக அமைக்கப்படும் குப்பை கிடங்கில் கொட்டப்பட உள்ளது.
இந்நிலையில் தங்களது கிராமத்தில் குப்பை கிடங்கு அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுவை அளித்தனர். ஆனால் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்காத மாவட்ட நிர்வாகம் காவல்துறை உதவியுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மலையடிவாரத்தில் பள்ளம் தோண்டி குப்பைகளை கொட்டியது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் குப்பை கொட்டக் கூடாது என கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் நகராட்சி ஊழியர்களை கொண்டு மரக்கன்றுகளை அகற்றி குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அதே பகுதியில் தங்கி சமைத்து விவசாய சங்கத்தினரும், கிராம மக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று புனல்காடு கிராமத்தில் இருந்து விவசாய சங்கத்தினரும், கிராம மக்களும் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்பொழுது திருவண்ணாமலை வேலூர் சாலை அண்ணா நுழைவாயில் அருகே தடுப்புகள் அமைத்து கிராம மக்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு வாக்குவாதம் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நடை பயணத்திற்கு ஆதரவாக இருந்த தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சண்முகத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தடுத்து நிறுத்தி தனியாக அழைத்து சென்றதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினரும், கிராம மக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவகங்கை பாண்டியன் கோட்டையில் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு: தொல்லியல் துறை