திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 27 ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு 9 ஒன்றியங்களுக்கு 27ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஆரணி ஒன்றியத்தில் ஓட்டுக்கு அதிமுகவினர் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேவூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை விநியோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் தொகுதி ஆரணி ஆகும்.
அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டையை சேவூரில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் டோக்கன் முறையில் வழங்குவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அரிசி வழங்கியவர்கள் மற்றும் அரிசி வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். எதற்காக அரிசி மூட்டை வழங்கினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் நூதன போராட்டம்.!