கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அதிகளவில் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். அவ்வாறு வெளியே வரும் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்கள் வாங்குவதால் கரோனோ தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்கும் விதமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காய்கனி மற்றும் மளிகை கடை வியாபாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கரோனோ பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முதல் நான்கு மளிகை கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும், காய்கறி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தள்ளுவண்டியிலோ அல்லது டாட்டா ஏஸ் போன்ற சரக்கு வாகனங்களிலோ அத்தியாவசியப் பொருள்களை கொண்டு சென்று பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுளளது.
இதனை மீறி கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களது கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செங்கம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செயல் அலுவலர் திருமூர்த்தி மற்றும் செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ‘தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்’ - மு.பெ.கிரி