திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 732 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் 15 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 329 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, 300 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சிகிச்சை பெற வந்தவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆட்டோவில் எடுத்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.