திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தக்கன்ராயபுரம் கிராமத்தில் சத்துணவு சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வந்தவாசி அடுத்த தக்கன்ராயபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 54 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு வழக்கம்போல் சத்துணவு வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட 54 மாணவர்களில் 9 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் பச்சையப்பன் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக ஒன்பது மாணவர்களை சிகிச்சைக்காக மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தகவலறிந்த வந்தவாசி வட்டாட்சியர், சுகாதார ஆய்வாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: மாயாற்றின் குறுக்கே பொதுமக்களின் பங்களிப்போடு அமைக்கப்பட்ட தற்காலிக பாலம்!