திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்து, மருத்துவ சிகிச்சையும் பெற்றார்.

இது குறித்து பேசிய கந்தசாமி, "மாவட்டம் முழுவதும் உள்ள 18 ஒன்றியங்களிலும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற மருத்துவ முகாமில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை சந்தித்து மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொண்டனர்.
12 ஆயிரத்து 773 பேர் உயர் சிகிச்சை மேற்கொள்வதற்கு பரிந்துரையும் செய்யப்பட்டனர். இந்த மருத்துவ முகாம் மிகப்பெரிய அளவில் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது" என்றார்.

முகாமில் சிகிச்சை பெற்றவர்களுக்கு உடல்நிலை அறிக்கை அட்டை வழங்கப்பட்டு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, ஈசிஜி, பொது மருத்துவம் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.