திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், ரத்தசோகை கண்டறியப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசிக் கலவை அடங்கிய பாக்கெட்டுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன், திட்ட அலுவலர், கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். அங்கன்வாடி மையங்களில் பதிவுசெய்துள்ள கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை குறைபாடு இருந்தால் சிவப்பு அரிசிக் கலவை 89.81 லட்ச ரூபாய் செலவில் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் மூன்று மாத கர்ப்பக் காலத்தில் உள்ள ரத்த சோகை குறைபாடுடைய 2 ஆயிரத்து 647 கர்ப்பிணிகளுக்கு நாளொன்றுக்கு 100 கிராம் வீதம் மாதம் 30 நாள்களுக்கு 3 கிலோ சிவப்பு அரிசி, அவல் கலவை இந்த மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிப் பெண்களின் ரத்தசோகை குறைபாட்டினைக் குறைத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளை போற்றுவோம் என்ற உன்னத நோக்கத்திற்காகவே.