திருவண்ணாமலை: “ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தான் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி” என மருத்துவ காப்பீட்டுத் திட்ட அறிமுக விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் ரோட்டரி டயாலிசிஸ் சென்டரில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அறிமுக விழா நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, அரசால் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் மருத்துவ காப்பீடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர், விழாவில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “ஏழை எளிய மக்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கி இருக்கும் மக்கள் பயனடையும் வகையில், கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். இதன் மூலம் பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கி உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானாவின் பாரம்பரிய மகாகாளி அம்மனின் போனாலு திருவிழா: பக்தர்கள் காத்திருந்து வழிபாடு
தொடர்ந்து பேசிய அவர், “பின்னர் இந்தத் திட்டம் அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசு தான். இதன் மூலம் ஏழை எளிய மக்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் திட்டமாக இந்த மருத்துவ காப்பீடுத் திட்டம் அமைந்துள்ளது.
தற்போது இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் உண்மையான நோக்கத்தினை, பெற்றோர்களிடம் எடுத்துச் சென்று சேர்க்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகள் தனியார் தொண்டு அமைப்புகளின் மூலம் செயல்படுத்த, தற்போதைய திமுக அரசு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு இல்லாமல் பயணம் செய்யும் வகையில் அமையக்கூடும். இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் தற்போது தமிழ்நாடு அரசு அதிகளவில் கவணம் கொண்டு செயல்படுத்தி வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு... ஆம் ஆத்மியை விட்டு வெளியேறிய முக்கியத் தலைவர்!