திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தையொட்டி, பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
கார்த்திகை மாத சோமவார பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கனகாம்பரம், மல்லி, வில்வஇலை, சாமந்திப்பூ உள்ளிட்ட வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.