திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி கிராமத்தில் உள்ள பவுல் ஆரோக்கியராஜ் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவிக்கு வேலை பெறும் நோக்கில் செங்கம் வட்டம் பரமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் வேலூரில் உள்ள சங்கரன்பாளையத்தில் வசிக்கும் திருப்பதி ஆகியோரிடம் ஏழு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் இதுநாள்வரை அவரது மனைவிக்கு வேலையும் பெற்றுத் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் திருப்பதி அலைக்கழித்துள்ளார். இதனால் பவுல் ஆரோக்கியராஜ் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், திருப்பதி மற்றும் ஜோதி ஆகிய இருவருக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டால் பல்வேறு ஊர்களில் இருப்பதாகவும் பணத்தை திருப்பித் தரமுடியாது என்று கூறுவதாகவும், ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் புகார் தெரிவித்துவிட்டேன். இருப்பினும் திருப்பதி மற்றும் ஜோதி ஆகிய இவர்கள் காவல் துறை விசாரணைக்கு வர முடியாது, எங்கள் மேல் உள்ள புகாரை நீதிமன்றத்தில் நாங்கள்சந்தித்துக் கொள்கிறோம் என்று ஆணவத்துடன் கூறுகின்றனர். 7 லட்ச ரூபாயை கொடுத்துவிட்டு மாதாமாதம் வட்டி கட்டி வருகிறேன். என்னைப்போல் திருப்பதி மற்றும் ஜோதியிடம் பலரும் வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டிருக்கலாம். எனவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து 7 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத் தரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.