திருவண்ணாமலை: பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் முகமது ஷேஃப்(23). இவர் தன்னுடைய 3 நண்பர்களுடன், தனித்தனியாக இரு சக்கர வாகனங்களில் பெங்களூருவில் இருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதையடுத்து சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று (டிச.30) திரும்பி வந்துள்ளனர்.
அப்பொழுது, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட் (Barricade) மீது முகமது ஷேஃப்பின் இருசக்கர வாகனம் மோதி உள்ளது.
இதன் காரணமாக, இரு சக்கர வாகனம் சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு சாலையில் உரசியவாறு வந்துகொண்டிருந்த அதே வேகத்தில் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இந்த தீயானது முகமது ஷேஃப் மீதும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயினை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணத்தின் போது கவனமாக இருங்கள்: இது போன்ற நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் போது, தலைக்கவசத்தை மறக்காமல் அணிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில், நமது எதிர்காலத்தையும் நமக்காக வீட்டில் உள்ள உறவுகளையும் மனதில் கொண்டு மிகவும் கவனமாக மிதமான வேகத்திலேயே பயணிக்க வேண்டும் என்பதை மறவாதிருங்கள், அனைவரும்.
இதையும் படிங்க: துப்பாக்கியை துடைக்கும்போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தாரா முன்னாள் ராணுவ வீரர்?