திருவண்ணாமலை மாவட்ட கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் அதே கிராமத்தில் ஈஸ்வரி என்பவரை ஐந்து வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் பெற்றோர், ஈஸ்வரிக்கு அவசர அவசரமாக ஜூன் 5- ஆம் தேதி வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைத்தனர். இந்த திருமணத்தில் உடன்படாத ஈஸ்வரி அன்று இரவே தாலியை கழற்றி வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் ஈஸ்வரியும், குமாரும் ஜூன் 21-ஆம் தேதி ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைபடி பதிவு திருமணம் செய்து தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஊர் பொது மக்கள் குமாரின் தயாரிடம் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்ணை திருட்டு தனமாக குமார் இழுத்து சென்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறி முறையிட்டனர். இதனால் ஊருக்கு பெரும் அவமனம் ஏற்பட்டதாகக் கூறி இதற்கு அபதரமாக ஒரு லட்சம் ரூபாயும் விரைவில் ஊரை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தி, அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
மேலும் அபராதம் கட்ட தவறினால் வீட்டை எரித்துவிடுவதாகவும், மணமக்கள் ஊரில் நுழைந்தால் அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறும் குறை தீர்ப்பு கூட்டத்தில் குமார் குடும்பத்தினர் மனு அளித்தனர். மனு அளித்து இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமாரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும் எங்கள் உயிருக்கோ உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் பெண்வீட்டாரும் ஊர் மக்களே காரணம் எனவும் கூறியுள்ளனர்.