சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் நவ.9ஆம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தற்கொலை செய்துக்கொண்டார். மத ரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக பாத்திமாவின் செல்போனில் குறுந்தகவல் இருப்பதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தேசியளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐஐடியில் பயிலும் மாணவர்கள் சாதி, மத ரீதியாக தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நன்கு படித்துக் கொண்டிருந்த தனது மகளுக்கு ஏற்பட்ட நிலைமை வேறுயாருக்கும் ஏற்படக்கூடாது என்று பாத்திமாவின் தந்தை லத்தீப் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சி அறிவொளி பூங்கா அருகே, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழுவின் சார்பில் மாணவி பாத்திமாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாணவி தற்கொலைக்கு காரணமாக இருக்கும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: என் மகளுக்கு நேர்ந்த கதி யாருக்கும் நேரக்கூடாது - பாத்திமாவின் தந்தை