பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், புகழ்பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று அறிவித்ததையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் குறிப்பாகக் கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று உளவுத்துறை தெரிவித்ததையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையிலும், கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.