திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி வெண்ணிலா. பச்சையப்பன் தந்தை துரையுடன் (65) ஒரே வீட்டில் வசித்து வருகிறார். பச்சையப்பன்- வெண்ணிலா தம்பதியருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.
இந்தச் சிறுமியை தாத்தா முறையான துரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று எண்ணி திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் 4 மாத கருவை கலைத்து உள்ளனர்.
இதற்கு அந்த மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் அலமேலு கருக்கலைப்பு செய்ய உடந்தையாக இருந்துள்ளார். கருக்கலைப்பு முடிந்த பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் தொடர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் தாத்தா துரை.
இதனை அறிந்த பெற்றோர் சிறுமியை மாவட்ட சமூக நலத்துறை மூலம் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை அறிந்த காப்பக அலுவலர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், சொந்த பேத்தியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மகளை கருக்கலைப்பு செய்த தந்தையும் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சிறுமியின் தாய் மற்றும் கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகியோரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.