திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த 2,132 பேர் 21 மையங்களில் பாலிடெக்னிக், கல்லூரி மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மருத்துவ பரிசோதனையில் நோய்தொற்று இல்லாதவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.
நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. எனவே ஆரஞ்சு மண்டலமாக இருந்த மாவட்டம் இன்று முதல் சிகப்பு மண்டலமாக மாறியது. புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 10 பேரும் கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றிவிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தவர்கள்” என்றார்.