திருவண்ணாமலை: உலகின் வடபகுதிகளில் இருந்து தென் பகுதிகளுக்கு பறவைகள் இடம்பெயருகின்றன. குளிர்காலத்தில் நீர்நிலைகள் பனியால் உறைந்துவிடும் என்பதால், நீர் நிலைகள், காடுகளை சார்ந்து வாழும் பறவைகள், மிதவெப்ப மண்டல நாடுகளுக்கு இடம்பெயர்வது வழக்கம். அங்கு இனவிருத்தி செய்த பின், சிறிது காலம் தங்கும் பறவைகள் மீண்டும் சொந்த இடங்களுக்கே சென்று விடுகின்றன.
பொதுவாக ஆஸ்திரேலியா, ஐரோப்பா, பிற ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, பறவைகள் இனவிருத்திக்காக வருவது உண்டு. குறிப்பாக வேடந்தாங்கல், கோடியக்கரை உள்ளிட்டப் பகுதிகளில் இதமான சூழலும் நிலவும்போது அங்கு ஆயிரக்கணக்கான பறவைகள் படையெடுப்பது உண்டு.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள வேடந்தவாடி ஏரியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. நத்தைக்குத்தி நாரை, வெள்ளை கொக்கு உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் வந்துள்ளதால் வேடந்தவாடி ஏரி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
காலை நேரங்களில் இரை தேடச்செல்லும் பறவைகள், மாலையில் மீண்டும் கூட்டுக்கு வந்தடைகின்றன. விதவிதமான பறவைகள் வந்துள்ளதால், வேடந்தவாடி ஏரி பறவைகள் சரணாலயம் போல் மாறியுள்ளது. தினமும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பறவைகளை கண்டுகளித்து வருகின்றனர். ஏரிக்கு வலசை வந்துள்ள பறவைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பணிகளை, கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த சென்னை மாநகராட்சி முடிவு!!