திருவண்ணாமலை: ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் உள்ள ஐந்து நட்சத்திர அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் இன்று (ஜூலை2) மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றதாகத் தெரிகிறது. பின், அங்கு பசியோடு இருந்த அவர்கள் மட்டன் பிரியாணி வாங்கியுள்ளனர். அதை சாப்பிடத்தொடங்கியதும், அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
மட்டன் பிரியாணியில் மட்டன் துண்டுகளுக்கு நடுவே கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மட்டன் பிரியாணிக்கு பில் கேட்டதற்கு, கடையில் பில் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
பின்னர் கடையின் ஊழியரிடம் மூர்த்தி தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஒரு வழியாக பில் தந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக, அங்கு ஏற்கெனவே சிக்கன் பிரியாணி, சிக்கன் தந்தூரி ஆகியவற்றை சாப்பிட்டு ஒரு மாணவன், ஒரு சிறுமி ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது, நடந்த இச்சம்பவத்தால் ஆரணியில் அசைவ உணவுப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உணவு பாதுகாப்புத்துறையினர் கண்துடைப்புக்காக ரெய்டு செய்யாமல், தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "தம் பிரியாணி, இரானி தேனீரை சுவைக்க மறக்காதீர்கள்" - பாஜக தலைவர்களை கலாய்த்த கே.டி. ராமாராவ்!