திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (37) . இவர் ஆரணி டவுன் சைதாப்பேட்டை கமண்டல நாக நதி தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ் (41) என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாத காலமாக கிருஷ்ணவேணி ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்பவருடன் காதல் ஏற்பட்டு ஒரேநேரத்தில் இருவரையும் காதலித்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணவேனியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி மற்றொரு காதலனான அஜித்துடன் சேர்ந்து சுரேஷை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று இரவு சுரேஷை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வரவழைத்த கிருஷ்ணவேணி, அஜித்குமாருடன் சேர்ந்து சுரேஷை கொடூரமான முறையில் மார்பில் கத்தியால் குத்தியும், கட்டையால் தாக்கியும் கொலைசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து புதருக்குள் ஆண் சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக நகர காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுரேஷின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
இதில், கிருஷ்ணவேணிக்கும் அஜித்குமாருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினர், அஜித் குமாரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து சுரேஷை கொலைசெய்தது அம்பலமானது. இதனையடுத்து அஜீத் குமாரை ஆரணி நகர காவல் துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாகியுள்ள காதலி கிருஷ்ணவேணியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
மேலும், ஒரே நேரத்தில் இரண்டு நபர்களைக் காதலித்த பெண் காதலன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மற்றொரு காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.