திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தில் வசித்துவரும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், ”கருங்காலி குப்பம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் சாமி ஊர்வலம் கடந்த 17ஆம் தேதி இரவு நடைபெற்றது.
திருவிழாவின்போது ஏழுமலை என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டார். அப்போது, நாங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றை அவர்கள் தீ வைத்து எரித்ததோடு மட்டுமில்லாமல், வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர். நாங்கள் தெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் சாமி சிலையை உடைத்து, மக்கள் மீது தாக்குதலும் நடத்தினர்.
இதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், வன்முறை ஏற்படுத்திய ஏழுமலை மீது புகாரளித்தும் காவல் துறையினர் மெத்தனமாக உள்ளனர். நாங்கள் அச்சத்துடனும் ஒருவிதமான பதற்றமான சூழலிலும் வாழ்ந்துவருகிறோம். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.