அந்த மனுவில், "ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் தேர்தல் பணி செய்யாமல் இருப்பதற்காக ரூபாய் ஒரு கோடி வாங்கி, நான் விலை போய்விட்டேன் என்று அமைச்சர் தூண்டுதலின்பேரில் அதிமுக நகரச் செயலாளர் அசோக்குமாரும், தேமுதிக நகரச் செயலாளர் சுந்தர்ராஜனும் என் மீதும், எனது கட்சியின் மீதும் திட்டமிட்டுப் பொய்யான அவதூறு செய்தியை தொகுதி முழுவதும் பரப்பிவருகின்றனர்.
எங்கள் வெற்றிவாய்ப்பைச் சீர்குலைக்கும் வகையில் ஏப்ரல் 5ஆம் தேதிமுதல் இன்றுவரை (ஏப். 23) ஆரணி தொகுதி அதிமுக நகரச் செயலாளர் அசோக்குமார், தேமுதிக நகரச் செயலாளர் சுந்தர்ராஜனை கொசப்பாளையம் சின்னகடை தெருவில் அழைத்து, உங்கள் வேட்பாளர் பாஸ்கரன், தேர்தலில் வேலை செய்யாமல் இருக்கவும், தேர்தல் சாவடி உங்கள் கட்சி ஆள்களை உட்கார வைக்காமல் இருக்கவும், எங்கள் அமைச்சர் ஒரு கோடி ரூபாய் தீர்வு செய்துவிட்டார் என்று பொய்யான தகவலைக் கூறினார்.
பொதுமக்களிடத்திலும் பொய்யான தகவலைக் கூறி என்னைப் பற்றியும், என்னுடைய நற்பெயருக்கும், என்னுடைய கட்சியின் நற்பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையிலும் எங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்குள் பிளவு ஏற்படும் வகையிலும் கூறினார்.
மேலும், இவர்கள் இருவருக்கும் பின்னால் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செயல்படுகிறார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மேற்படி இவர்களை அழைத்து இது சம்பந்தமாகத் தீவிர விசாரணை செய்து, இதன் உண்மை அறிந்து இவர்கள் மீது தக்க குற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.