திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கையில் கத்தியுடன் திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர் மற்றும் அவரது மூன்று நண்பர்கள், பொது மக்களுக்கு ஆயுதம் காட்டி மிரட்டுவதாக, செங்கம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, காவலர்களுடன் சென்று இடையூறு செய்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது அங்கிருந்து இருவர் தப்பி ஓடிய நிலையில், இருவரை மட்டும் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை ஆடையூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ் மற்றும் அவரது நண்பர்களான விஜய், ஆரோக்கியராஜ், வாத்து முருகன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் தமிழ் என்பவர் மட்டும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். பேருந்து தினத்தை கொண்டாடுவதற்காக செங்கம் வந்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஆரோக்கியராஜ் மற்றும் வாத்து முருகன் இருவர் மீதும் கொலை முயற்சி (307) வழக்கு இருக்கிறது. எனவே, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் 7 (1) A என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பட்டப்பகலில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் சிறிதுநேரம் செங்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னை நாட்டு வெடிகுண்டு விவகாரம் - மதுரையில் 4 பேர் சரண்!