திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரம் இன்று காலை அடையாளம் தெரியாத நபர், ஐந்து மூட்டைகளை வீசிச் சென்றனர். இது குறித்து அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூட்டைகளை ஆராய்ந்து பார்த்ததில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பாக்கெட்கள் பெட்டி பெட்டியாக இருந்தது தெரியவந்தது. பின்னர், அதனுள் 2 ஆயிரத்து 700 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
தற்போது 144 தடை உத்தரவு உள்ளதால் காவல்துறையினர் பல்வேறு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அதையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், கொண்டுச் செல்லும் வழியில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சாலையோரம் வீசி விட்டு சென்றனர்.
இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் முரளிதரன், காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேரமா காட்சிகளை ஆராய்ந்து, புகையிலை பாக்கெட்டுகளை வீசிச் சென்ற நபரை மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர். மேலும் அவற்றின் மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் லாரிகளுடன் பறிமுதல்!