திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சொந்தமான வீட்டு மனையில் மாடி வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் மாடி மேல் மின்சார கம்பி செல்வதால் வீடு கட்ட முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் மின்சார கம்பியை அகற்றுவதற்கு வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று புகார் செய்துள்ளார்.
அப்போது உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் இடையூறாக இருக்கும் மின்வயரை அகற்றுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் சக்திவேல் 50,000 கொடுத்துள்ளார். உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் பணம் வாங்கியும் மின் கம்பியை அகற்றாமல் சக்திவேலை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இது சம்பந்தமாக சக்திவேல் பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்ட போது மின் ஒயரை அகற்றுவதற்கு மேலும் 2000 ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சக்திவேல், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 2000 ரூபாய் நோட்டை சக்திவேலிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். அப்போது சக்திவேல் 2000 ரூபாய் நோட்டை உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் விசாரணை செய்து மின்கம்பியை மாற்றி அமைக்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்தனர். அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது, பொதுமக்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். லஞ்ச புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்களை போதுமான அளவு விளம்பரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வைகாசி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.16 கோடி!!