திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாளான நேற்று இரவு அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் வண்ண வண்ண மலர்களால் மாலை சூட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரத்தை வளம் வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் விநாயகர், முருகர், உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு பஞ்சமுக தீபாராதணை நடைபெற்றது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.