திருவண்ணாமலை: உலகப் பிரசித்திபெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கி, கடந்த 10 நாட்களும் வெகு விமரிசையாக கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. அதன்படி நேற்று முன்தினம் அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை ஐய்யங்குள தெருவில் அமைந்துள்ள குளத்தில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி நேற்று இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருவார்.
தை மாதம் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் திருவூடல் அன்று, பிருங்கி மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளித்த காரணத்தால், கோபம் கொண்ட உண்ணாமலையம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோயிலுக்குச் சென்றுவிடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவது ஐதீகம்.
இதனால் ஊடல் கொண்ட அம்மனை சமாதானம் செய்யும் விதமாக, கார்த்திகை தீபத்தன்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிப்பார். தீபம் முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின்போது, இரண்டாம் நாள் காலை கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக தன்னைத் தானே குடும்பத்துடன் சுற்றி கிரிவலம் வருவார் என்பதும் ஐதீகம்.
அதன்படி, இன்று காலையில் அண்ணாமலையர், உண்ணாமலையம்மன் மற்றும் துர்கையம்மனுடன் கிரிவலம் வந்தார். கிரிவலத்தின் போது வழிநெடுக பக்தர்கள் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்து, அரோகரா கோஷமிட்டு அண்ணாமலையாருக்கு வேட்டி, புடவைகள் அணிவித்து சாமிதரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான வெளிநாட்டினரும் கிரிவலப்பதையில் வந்த அண்ணாமலையரை பூஜித்து தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: நாகரிக வளர்ச்சியில் தமிழர்கள் மறந்துபோன மாவலி; தயாரிப்பது எப்படி?