திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவர் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் மீன் பிடிப்பதற்கு ஏரி ஒன்றை குத்தகைக்கு எடுத்துயுள்ளார்.
நேற்று முன் தினம் (மே.26) ஆனந்தராஜ் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டியிருந்தார். அப்போது, வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஏழுமலை என்பவர் மீன்களை இலவசமாகக் கேட்டு ஆனந்த்ராஜிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர், தனது ஆதரவாளர்கள் ஏழு பேருடன் சென்று ஆனந்த்ராஜிடம் தகராறு செய்து அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆனந்தராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற நிலையில், மேலும் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் ஏழுமலை, அவரது ஆதரவாளர்களுடன் ஆனந்தராஜின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார்.
பின்னர் ஆனந்த்ராஜின் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரையும் தீ வைத்து எரித்துள்ளனர். ஆனந்தராஜின் தாய் கமலாவையும் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ஏழுமலை உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா பரவல் விகிதம் 12.1% ஆக குறைந்தது!